மார்ச் 16, 2011

4 அணுஉலைகள் இதுவரை வெடிப்பு: கதிர்வீச்சுக் காற்று டோக்கியோவை நோக்கி நகர்வதாக எச்சரிக்கை


பூகம்பத்தினாலும் கடல்கோளாலும் பாதிக்கப்பட்டுள்ள அணுஉலை வெடித்து தாழ்ந்த மட்டத்திலான கதிர்வீச்சு டோக்கியோவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை பாரிய அனர்த்தத்தை எதிர்கொள்ளும் நிலைமைக்கு ஜப்பான் தள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில், தலைநகரிலிருந்து மக்களில் ஒரு பகுதியினர் வெளியேறியுள்ளனர். ஏனையவர்கள் அத்தியாவசியப்
பொருட்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். டோக்கியோவுக்கு வடக்கே 18 மைல் தூரத்தில் உள்ள மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும் எரிபொருட்களைச் சேகரித்து வைக்குமாறும் நேற்று செவ்வாய்க்கிழமை ஜப்பானியப் பிரதமர் நயோட்டா கான் வலியுறுத்தியுள்ளார்.
1986 இல் உக்ரேனில் செர்னோபைல் அனர்த்தம் ஏற்பட்டதன் பின்னர் உலகம் மிக மோசமான அணு அனர்த்தத்தை எதிர்கொள்ளும் ஆபத்து உருவாகியுள்ளது.
பூமியதிர்வு,கடல்கோள் அனர்த்தத்தைத் தொடர்ந்து அணுக்கதிர் தாக்கமும் ஏற்பட்டிருக்கும் நிலையில், ஜப்பானின் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் பங்குச்சந்தை 14 வீதமாக வீழ்ச்சி கண்டது.
பத்து மணித்தியாலத்தில் தலைநகரிலிருந்து 240 கிலோமீற்றர் தூரத்திலுள்ள அணு உலையிலிருந்து தாழ்ந்த மட்டத்திலான கதிர்வீச்சு காற்று வந்தடையும் என டோக்கியோவிலுள்ள பிரெஞ்சுத் தூதரகம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்திருந்தது.      டோக்கியோவின் வடக்கே 100 கிலோமீற்றர் தூரத்திலுள்ள மையேபாஷி நகரத்தில் கதிர்மட்டம் வழமையானதைவிட பத்து மடங்குகள் அதிகரித்திருந்ததாக கியூடோ செய்திச்சேவை கூறியுள்ளது.
கதிர்வீச்சு கசிவு மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக நாட்டு மக்களுக்கு நேற்று கவலையுடன் உரையாற்றிய நயோட்டா கான் கூறியுள்ளார். கசிவு பரவாமல் தடுப்பதற்கான சகல முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். மக்கள் மிகவும் கவலையடைந்திருப்பதை நான் அறிவேன். பொறுமையுடன் செயற்படுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.
அணுஉலைகளை குளிர்ச்சிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அணுஉலைகளில் 2 அணுஉலைகளில் நேற்று செவ்வாய்க்கிழமை இரு வெடிச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எரிபொருள் குதம் தீப்பிடித்திருப்பதாகவும் கதிர்வீச்சு வெளியிடப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் சுற்றாடலுக்கு நேரடியாக அவை தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் ஐ.நா. அணுக் கண்காணிப்பு அமைப்புக்கு ஜப்பான் கூறியுள்ளது. இந்த அணுஉலையிலிருந்து மணித்தியாலத்துக்கு 400 மில்லிசிவேட்ஸ் மட்டத்திலான கசிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு வருடத்திற்கு 100 மில்லிசிவேட்ஸுக்கு மேலாகக் கசிவு இடம்பெற்றால் புற்றுநோய் ஏற்பட வழிவகுக்குமென சர்வதேச அணுச்சங்கம் தெரிவித்திருக்கிறது.
அணுஉலைகளைச் சூழவுள்ள 30 கிலோமீற்றர் பகுதியை வான் பறப்புக்கு ஜப்பான் தடை செய்திருக்கிறது. அமைதியாக இருக்குமாறு கேட்கப்பட்டபோதும் டோக்கியோ வாசிகள் பொருட்களை வாங்குவதற்கு டோக்கியோ கடைகளுக்கு முண்டியடித்துச் சென்றனர்.இது இவ்வாறிருக்க கதிர்வீச்சால் ஆபத்து ஏற்படுமென்ற பீதியை பிராந்தியம் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

தனது பகுதியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருப்பதாக சீனா கூறியுள்ளது. டோக்கியோவுக்கான விமான சேவைகளை இரத்து செய்திருப்பதாக எயார் சைனா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமெனத் தமது நாட்டுப் பிரஜைகளிடம் பல்வேறு தூதரகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. உல்லாசப்பயணிகள் தமது பயணத்தைக் குறுக்கிக்கொண்டு தத்தமது நாடுகளுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருக்கின்றனர். பல்தேசியக் கம்பனிகள் தமது அலுவலர்களை நாடுகளுக்குத் திரும்புமாறு வலியுறுத்தியுள்ளன. அல்லது டோக்கியோவுக்கு வெளியே செல்லுமாறு கேட்டுவருகின்றன.
இது இவ்வாறிருக்க இந்த அனர்த்தத்தைக் கையாளும் விதம் குறித்து பிரதமர் கான் மீது ஜப்பானிய ஊடகங்கள் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளன. அத்துடன், அணுஉலையை இயக்கும் ஹெப்கோ மீதும் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன. போதியளவு தகவலை வழங்குமாறும் சுகாதார ஆபத்துகள் தொடர்பான தகவல்களை மக்களுக்குத் தெரிவிக்குமாறும் ஊடகங்கள் வலியுறுத்துகின்றன. தைரோயிட்,எலும்புப் புற்றுநோய்,இரத்தப்புற்றுநோய் போன்றவை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சிறுவர்கள்,கருவுற்ற தாய்மார்களுக்கு பெரும் ஆபத்துக் காணப்படுவதாகவும் எச்சரிக்கப்படுகிறது.
பியூகுசிமா டாலிஜ்சி அணுஆலையிலுள்ள நான்காவது உலையின் கதிர்வீச்சு மட்டம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சின் தலைமைச் செயலாளர் யூகியோ எடானோ, பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியம் நிச்சயமாக இருப்பதாகக் கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பூகம்பம் மற்றும் கடல்கோளினால் அணு
உலைகள் சேதமடைந்ததையடுத்து மொத்தம் நான்கு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. 4 ஆவது அணுஉலை கொள்கலனில் கசிவு ஏற்படும் சாத்தியம் காணப்படுகிறது. இந்தக் கொள்கலனானது அணு எரிபொருள் குழாய்களைக் கொண்டதாகும் என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மூரே ஜெனக்ஸ் கூறியுள்ளார்.
அணுஉலைகளில் ஏற்படும் சேதம் தொடர்பான கவலைகள் ஒருபுறமிருக்க ரியக்டர்களைக் குளிரூட்ட உதவும் நீர்த்தேக்கத்தில் ஏற்பட்டிருக்கும் அமுக்கமானது மற்றொரு ஆபத்தைத் தோற்றுவிக்கும் சாத்தியத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. சீசியம், அயடின், ஸ்ரொனட்டியம் என்பன இந்தத் தண்ணீருக்குள் உள்ளன. இந்தச் சேதாரத்தின் தன்மை தெளிவாகத் தெரியவில்லை.
இதேவேளை, மீட்பு நிவாரணப் பணிக்கு உதவிக்கொண்டிருந்த அமெரிக்க போர்க்கப்பல்களும் விமானங்களும் கரையோரப் பகுதியிலிருந்து தற்காலிகமாக நகர்ந்து
சென்றுள்ளன. தாழ்ந்த மட்டத்திலான கதிர்வீச்சையடுத்து இவை விலகிச் சென்றுள்ளன. முன்னெச்சரிக்கையாக விலகிச் செல்வதாக அமெரிக்காவின் 7 ஆவது கடற்படைப்பிரிவு தெரிவித்திருக்கிறது. ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு வகைகளை பரிசோதிக்கப் போவதாகத் தென்கொரியா,ஹொங்கொங்,சிங்கப்பூர் போன்ற நாடுகள் கூறுகின்றன. இதுவரை ஏற்பட்ட இழப்புகள் 180 பில்லியன் டொலரைத் தாண்டியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜப்பானின் வட பகுதியில் 8 இலட்சத்து 50 ஆயிரம் வீடுகள் நேற்றுவரை மின்சாரமின்றி இருந்தன. 15 இலட்சம் வீடுகளுக்கு தண்ணீர் வசதி துண்டிக்கப்பட்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கானோரைக் காணவில்லையெனக் கூறப்படுகின்றது.நம்ப முடியாதளவுக்கு இங்கு நிலைமை மோசமாகவுள்ளது. அநேகமாக சகலதும் செயலிழந்துள்ளன என்று செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த ஒர்க்சூஸி கூறினார். 9500 பேர் இறந்தாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்குமென அஞ்சப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக