ஆகஸ்ட் 23, 2011


தமிழரை மிரட்டும் கிறீஸ் பூதங்கள்

இலங்கையின் தெற்கு, கிழக்கு பகுதிகளில் பூதங்கள் உலவுவதால் மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். மரங்களில் இருந்து தாவிப் பாயும் பூதங்கள், தனியாக செல்லும் இளம்பெண்களை கண்டால் விடுவதில்லை. விரல்களில் உள்ள கத்தி போன்ற கூரான நகங்களால், மார்பகங்களை கீறிக் கிழிக்கின்றன. இந்த சம்பவங்களின் விளைவாக பல்வேறு வதந்திகள் உலாவின. "துட்டகைமுனுவின் வாளை தேடுவதற்காக, கன்னிப் பெண்களின் இரத்தம் சேகரிப்பதாக," சிங்களப் பகுதிகளில் வதந்தி பரவியது. தமிழ்ப் பகுதிகளில் அந்தக் கதை, "ராஜபக்ஷவின் பதவிக் காலத்தை நீடிப்பதற்காக, ஒரு மந்திரவாதியின் பூஜைக்காக கன்னிப் பெண்களின் இரத்தம் சேகரிப்பதாக," மாற்றப்பட்டது. சிங்கள, ஆங்கில ஊடகங்கள் வதந்திகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால், தமிழ் ஊடகங்களில் தான் அதிகளவு வதந்திகள் செய்திகளாகின.

சிங்கள மக்கள் மத்தியில் "கிறீஸ் மனிதன்" என்ற கதை பிரசித்தம். ஆவிகள், பூதங்களை நம்பும் கிராம மக்கள் கிறீஸ் பூதங்கள் உலவுவதை நம்புகின்றனர். உண்மையில் உடம்பில் கிறீஸ் பூசிக் கொண்ட திருடர்கள் தான் கிறீஸ் பூதங்கள். திருடும் போது யாராவது பிடித்தால் வழுக்கும் என்பதற்காக கிறீஸ் பூசிக் கொண்டு செல்வார்கள். இவ் வருடம் ஜூலை 5 ம் தேதி, "கிறீஸ் பூதத்தின் முதலாவது தாக்குதல்" இடம்பெற்றது. இரத்தினபுரிக்கு அருகில் உள்ள, கஹவத்த என்னும் ஊரில் ஏழு பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். அந்த கொலைகளுக்கு காரணம் கிறீஸ் பூதம் என்ற வதந்தி பரவியது. பொலிஸ் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால், ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். சில நாட்களின் பின்னர், கொலைகாரன் கைது செய்யப் பட்டதாக தகவல் வந்தது. இராணுவத்தில் இருந்து தப்பியோடிய ஒருவனே, அந்த கொலைகளை செய்தவன் என்று கூறினார்கள். போர் நடந்த காலத்தில், இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்கள், வீடு புகுந்து கொள்ளையடிப்பதும், தனித்திருக்கும் பெண்களிடம் பாலியல் சேஷ்டைகள் செய்வதும் வழக்கமாக நடப்பது தான். ஆனால், இம்முறை அடுத்தடுத்த பல இடங்களிலும் நடைபெற்ற சம்பவங்கள் யாவும், யாரோ திட்டமிட்டு செய்வதை உறுதிப்படுத்தின.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் கிராமங்கள் அடுத்து இலக்கு வைக்கப் பட்டன. இந்தக் கிராமங்களை சேர்ந்த ஆண்கள் பலர் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்கின்றனர். அதனால் பெண்கள் தனியாகவே குடும்பத்தை கவனிக்கின்றனர். அவ்வாறு ஆண் துணையின்றி வாழும் பெண்களிடம், மர்ம மனிதர்கள் தகாத முறையில் நடந்துள்ளனர். பொதுவாக மர்ம ஆசாமிகள் முகம் தெரியாதவாறு கறுப்பு வர்ணம் பூசியிருந்தனர். பெண்களின் கூக்குரலைக் கேட்ட அக்கம் பக்க ஆட்கள் ஓடி வந்து, மர்ம மனிதர்களை பிடித்துள்ளனர். போலீசில் அவர்களை ஒப்படைத்த பின்னர், பொலிஸ் அவர்களை விடுதலை செய்துள்ளது. ஒரு தடவை, பிடிபட்ட மர்ம மனிதன், பொலிசாரிடம் ஏதோ ஒன்றை காட்டியதாகவும், அதன் பிறகு பொலிஸ் சல்யூட் அடித்து விடுவித்ததாகவும் பொது மக்கள் கூறுகின்றனர். பொத்துவிலில், படையினரிடம் தஞ்சமடைந்த மர்ம மனிதனை தம்மிடம் ஒப்படைக்குமாறு பொது மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். படைமுகாம் மீது கற்களை வீசியுள்ளனர். படையினர் சுட்டதில் ஒரு முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதி இறந்துள்ளார். கிண்ணியாவிலும், மக்கள் விரட்டிச் சென்ற மர்ம மனிதன், கடற்படை முகாமில் புகுந்துள்ளான். அதனால், அங்கே மக்களுக்கும் படையினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

கிறீஸ் பூதங்கள் என்ற மர்ம மனிதர்களை, இராணுவத்தினர் ஏவி விடுவதாக தமிழ், முஸ்லிம் மக்கள் சந்தேகிக்கின்றனர். அவர்கள் சந்தேகபடுவது போல பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பொது மக்கள் விரட்டிய மர்ம மனிதர்கள், படையினர் முகாம்களுக்குள் ஓடி ஒளிந்திருக்கிறார்கள். பொதுமக்கள் பிடித்துக் கொடுத்தாலும், போலீசார் விடுதலை செய்துள்ளனர். வவுணதீவில் சீருடையில் மோட்டார் சைக்கிளில் வந்த படையினர், மர்ம மனிதர்களை இறக்கி விட்டுச் சென்றதை மக்கள் கண்டுள்ளனர். இவையெல்லாம், இராணுவ புலனாய்வுத் துறையை சேர்ந்தவர்கள், மர்ம மனிதர்களாக நடமாடுவதாக நிரூபிக்கின்றது. அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம் கிராமங்களில் முன்னர் அரசு வழங்கிய துப்பாக்கிகளை வழங்கியிருந்தது. போர் நடந்த காலங்களில் புலிகளின் தாக்குதல்களை தடுப்பதற்காக, அந்த முஸ்லிம் கிராமவாசிகளுக்கு துப்பாக்கிகள் கொடுக்கப்பட்டிருந்தன. கிறீஸ் பூதங்கள் தாக்குவதற்கு, சரியாக இரண்டு நாட்களுக்கு முன்னர் தான், துப்பாக்கிகள் மீளப் பெறப்பட்டன. கிழக்கு மாகாணம் முழுவதும், தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் முழுவதும், அரச படைகள் மேலான அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மக்களுடன் ஏற்பட்ட விரிசலை அடைப்பதற்கு, அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால், சிறிலங்கா அரசே கிறீஸ் பூதங்களை நடமாட விட்டிருக்கும் என்ற சந்தேகம் வலுக்கவே செய்கின்றது.

அரசாங்கத்தைப் பொறுத்த வரையில், "கிறீஸ் பூதங்கள் பற்றிய செய்திகள் எல்லாம் வெறும் வதந்தி" என்று கூறுகின்றது. "அரசுக்கு அபகீர்த்தி உண்டாக்குவதற்காக, வெளிநாடுகளில் இருந்து டாலர்களை பெற்றுக் கொண்டவர்களது வேலை," என்று மறைமுகமாக அரசுசாரா நிறுவனங்கள் மீது குற்றம் சுமத்துகின்றது. கிறீஸ் பூதம் பற்றிய அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியிலும், "இவன் தான் கிறீஸ் பூதம்" என்று, வெள்ளை நிற கிறீஸ் பூசிய, டிராகுலா போன்று வாயில் இரத்தம் வழியும் ஒருவனின் முகத்தை காட்டினார்கள். கிறீஸ் பூதம் என்ற பீதியை கிளப்பி விட்டு கள்வர்கள் தங்கள் கைவரிசையை காட்டுவதாக அரசு கூறி வருகின்றது. ஆனால், அந்தக் கள்வர்களை பிடிக்க முடியாத நிலையில் தான் பொலிஸ் இருக்கின்றது. சில நேரம் பொது மக்கள் பிடித்துக் கொடுத்த மர்ம மனிதர்களை, பொலிஸ் பாதுகாத்து விட்டதற்கு என்ன காரணம் கூறுகின்றது? பொது மக்கள் ஒப்படைத்த மர்ம நபர்கள் மனநோயாளிகள் என்றும், வெளியில் விட்டால் அடித்து கொன்று விடுவார்கள் என்பதால், தாம் அடைக்கலம் கொடுத்தாக பொலிஸ் கூறுகின்றது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர், கொழும்பு நகரில் மர்மமான தொடர் கொலைகள் நடந்து கொண்டிருந்தன. தலைநகரில் இருந்த பிச்சைக்காரர்கள் பலர், மர்மமான முறையில் பாறாங்கல்லைப் தூக்கிப் போட்டு கொலை செய்யப் பட்டுக் கிடந்தனர். பிச்சைக்காரர்களை அகற்றி விட்டு, தலைநகரை அழகு படுத்துவதற்கான அரசின் திட்டம் என்று பரவலாக சந்தேகிக்கப்பட்டது. இன்று வரை கொலைகாரர்கள் பிடிபடாததால், போலீஸ்காரர்களே அந்தக் கொலைகளை செய்திருக்க வேண்டும். அது போன்று, கிறீஸ் பூதம் என்ற பீதியைக் கிளப்பி, பொது மக்களைக் கொண்டே மன நோயாளிகளை அகற்றும் திட்டம் அரசுக்கு இருக்கலாம். இதை விட, இனி வருங்காலங்களில் புலிகள் போன்ற தலைமறைவு இயக்கங்களின் இருப்பை சாத்தியமற்றதாக்கும் நோக்கமும் இருக்கலாம். "வெளிநாடுகளில் தங்கியுள்ள புலிகள், இலங்கைக்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக" கோத்தபாய ராஜபக்ச அறிவித்துள்ளமை நினைவுகூரத் தக்கது.

இவற்றை நிரூபிப்பது போல, மக்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் சந்தேகப் படுகின்றனர். சந்தேகப் படும் படியாக எவராவது நடந்து கொண்டால், கிறீஸ் பூதம் என்று பிடித்து அடிக்கிறார்கள். அது சில நேரம் பக்கத்து வீட்டுக்காரனாகவும் இருக்கலாம். முன்பெல்லாம் அரசு மக்களை பயமுறுத்தி அடக்கி வைப்பதற்கு, புலிகள் என்ற இயக்கம் இருந்தது. தற்போது புலிகள் அழிந்து விட்ட நிலையில், கிறீஸ் பூதங்கள் இறக்கி விடப் பட்டுள்ளன. "மக்கள் மனதில் அச்ச உணர்வை ஏற்படுத்தினால் ஆள்வது இலகு." என்ற அமெரிக்காவின் பிரபலமான "அதிர்ச்சி கோட்பாடு" (The Shock Doctrine) இங்கே நடைமுறைப் படுத்தப் படுகின்றது. மேற்குலக நாடுகளும், முன்பெல்லாம் கம்யூனிச பூதத்தையும், பனிப்போருக்கு பின்னர் அல்கைதா பூதத்தையும் காட்டித் தானே மக்களை பயமுறுத்தி வைத்துள்ளன? நோயாளிகளுக்கு மின்சார அதிர்ச்சி கொடுப்பது போல, முழு சமுதாயத்தையும் அதிர்ச்சி வைத்தியம் செய்து வசியப் படுத்தி வைக்க முடியும். அதன் மூலம், ஆட்சியாளரின் நோக்கங்கள் இலகுவில் ஈடேறும். அறுபதுகளில் சிஐஏ கண்டுபிடித்த அதிர்ச்சி கோட்பாடு பற்றிய விரிவான தகவல்களுக்கு, Naomi Klein எழுதிய
The Shock Doctrine என்ற நூலை வாசிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.

கிறீஸ் பூதம் கிளப்பி விட்ட பீதியின் பின்னணியில், பல அரசியல் மாற்றங்கள் நடைபெறலாம் என்று பலர் எதிர்வு கூறுகின்றனர். அவற்றை மறுக்கவும் முடியாது. போர் முடித்த பின்னர், அவசர கால சட்டத்தை எடுக்க வேண்டிய நெருக்குவாரத்தில் அரசு உள்ளது. அவசர கால சட்டத்தை நீக்கினால், வடக்கு-கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தை வாபஸ் பெற வேண்டும். இராணுவத்திற்கான செலவினத்தை குறைக்க வேண்டும். மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தீர்வு ஒன்றை கொண்டு வர வேண்டிய கடப்பாடு அரசுக்கு உள்ளது. "யுத்தம் முடிந்து விட்டது. இனி என்ன தீர்வு?" என்று கோத்தபாய தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. ஜனாதிபதியான மகிந்தவே இதுபற்றி கருத்து தெரிவிக்காத வேளை, பாதுகாப்பு அமைச்சர் தீர்வுத் திட்டம் குறித்து பேசுவது விசித்திரமானது. அதே போன்று, ஜெயலலிதாவின் கோரிக்கைகளுக்கு பதிலடி கொடுத்த கோத்தபாயவின் நடவடிக்கையும் விமர்சனத்திற்குள்ளானது. அயல் நாட்டு விவகாரங்களை கவனிக்க, ஒரு வெளிநாட்டு அமைச்சர் இருக்கிறார். அவர் வாயை மூடிக் கொண்டிருக்கிறார். இத்தகைய போக்குகளை, எந்தவொரு அரசியல் அவதானியும் கோர்த்துப் பார்த்ததாக தெரியவில்லை.

இன்றைய இலங்கை அரசியலில், முன்னெப்போதும் இல்லாதவாறு எதிர்க்கட்சி பலவீனமாக உள்ளது. தேசத்தின் மீது இரும்புப் பிடியை வைத்துள்ள சுதந்திரக் கட்சி அரசாங்கம் சர்வ வல்லமையுடன் ஆட்சி செய்கின்றது. எந்தவொரு இறுக்கமான அரசென்றாலும், அங்கே இரு வேறு பட்ட போக்குகள் தோன்றலாம். இலங்கையில், கோத்தபாய தலைமையில் இராணுவ ஆட்சியை நிலைநாட்டும் பிரிவினர் பலமடைந்து வருவதாக தெரிகின்றது. இராணுவம் என்ற பூதத்தை ஊட்டி வளர்ப்பது ஆட்சியாளர்களுக்கு அவசியமானதாக உள்ளது. கிறிஸ் பூதம் என்ற ஹிஸ்டீரியா மக்களை ஆட்கொண்டுள்ள தருணத்தில், படைகளை குவிப்பதற்கு காரணம் கிடைத்துள்ளது. தமிழ்-முஸ்லிம் பிரதேசங்களில், கிறீஸ் பூதம் பிரச்சினையில், இராணுவத்திற்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் வெடித்துள்ளன. அவை ஒரு மக்கள் எழுச்சிக்கு இட்டுச் செல்லும் என்று எதிர்பார்க்க முடியாது. தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் தேசிய தலைமைகள், கிறீஸ் பூதம் பற்றிய பீதியை பரப்புவதில் மட்டுமே குறியாகவுள்ளன. இதன் மூலம், இலங்கை அரசின் Shock Doctrine திட்டத்திற்கு உடந்தையாகவுள்ளன. அரசும், தமிழ் தேசியவாதிகளும், கூட்டாக சேர்ந்து பிரயோகிக்கும் "அதிர்ச்சி வைத்தியம்", மக்களை பலவீனப்படுத்தி, நடைப் பினங்களாக்குவதை குறிக்கோளாக கொண்டுள்ளது. அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படாது. மாறாக, அவர்களின் சொந்த பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக அரசிடம் தான் தஞ்சம் அடைவார்கள். அதிலிருந்து மக்களை மீட்டெடுப்பது கடினமான காரியம் தான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக