செப்டம்பர் 13, 2011



இறை வல்லமையை உணர்த்தி 


நிற்கும் பருந்து


அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகளின் தொடரில், மிகவும் அபூர்வமான, மனித வாழ்க்கைக்குப் பல பாடங்களைப் புகட்டித்தரக்கூடிய, இறை வல்லமையை உணர்த்துகின்ற, பரிணாம வாதத்திற்கு சவால்விடுகின்ற பருந்துப் பறவைகளின் வாழ்க்கை வட்டத்தைப் பற்றியும் அவற்றின் இயல்புப் பண்புகள் பற்றியும் சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

இவை பருந்து (Eagle), இராஜாளி (Vulture), கழுகு என அனைவராலும் பொதுவாக அழைக்கப்படுகின்றன. பறக்கும் பறவைகளில் சற்றுப் பெரிதானதும் பலமானதும் திடகாத்திரமானதுமான பறவை இந்த பருந்துதான். அத்தோடு பறவைகளிலேயே கூடுதல் ஆயுள்கொண்டதும் மிக மிக உயரத்தில் பறக்கக்கூடியதும் இதுதான்.

ரோம், ரஷ்யா, ஆஸ்ட்ரியா, அமெரிக்கா மற்றும் இன்னும் பல நாடுகளின் முக்கியம் வாய்ந்த கொடிகளிலும் இலச்சினைகளிலும் பருந்தின் உருவம் சின்னமாக வரையப்பட்டிருக்கின்றது. இது தமது பலத்தையும் துணிவையும் எடுத்துக்காட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பருந்துகள் பார்ப்பதற்கு வசீகரிக்கும் தோற்றம் கொண்டவை. இவை கூர்மையான அலகையும் சிறந்த கேள்விப்புலனையும் அபார பார்வைச்சக்தியையுடைய இரு காந்தக் கண்களையும் பெற்றுள்ளன. ஏவ்வளவுதான் உயரத்தில் பறந்தாலும் அங்கிருந்து தரையில் இருக்கும் தன் இறையை உண்ணிப்பாக அவதானித்துவிடும். துரையில் மட்டுமல்ல நீர் நிலைகளில் இருக்கும் மீன்களையும் இவை நோட்டமிட்டுக்கொண்டே வானில் வட்டமிடுவதைக்காணலாம். ஆந்த அளவிற்கு பருந்துகளின் கண்பார்வையை அல்லாஹ் கூர்மையாக்கிக் கொடுத்துள்ளான்.

பருந்துகளில் அறுபது வகை இனங்கள் காணப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒரு வளர்ந்த பருந்து 75 செ.மீ முதல் 90செ.மீ வரை நீளமாக இருக்கும். அத்தோடு அவை சுமார் 6 கி.கி. அளவு நிறையையும் கொண்டிருக்கும். விண்ணில் உயர்ந்து தன் சிறகுகளை அகல விரித்தால் ஒரு சிறகிலிருந்து மற்றைய சிறகுக்கும் இடையில் சுமார் 2 மீட்டர் இடைவெளி இருக்கும். பருந்துகள் கருப்பு, பழுப்பு, மற்றும் இவற்றுடன் வெள்ளை கலந்த நிறங்களில் காணப்படுகின்றன. Peregrine Folcon எனும் பெரிய இனக் கழுகுகள் மணிக்கு சுமார் 200 மைல் வேகத்தில் பறந்து செல்கின்றன.

பருந்துகளது உடலைப்போர்த்தியுள்ள அடர்த்தியான சிறகுகள் தட்ப வெப்ப நிலைகளில் அவற்றின் உடலைப் பாதுகாக்கின்றன. அல்லாஹ் அவற்றுக்கு வழங்கியிருக்கும் பலமான இரு கால்கள் மூலமும் அவற்றில் காணப்படுகின்ற உறுதியான கூர்மையான நகங்கள் மூலமும் அவை தம் எதிரியைத் தாக்குவதோடு தமக்கான உணவுகளைப் பற்றவும் செய்கின்றன.

பருந்துகள் முயல், அனில், மீன்கள், பாம்பு, பல்லி, எலி, தவளை என பலதையும் உணவாகக் கொள்கின்றன. அத்தோடு மான் குட்டிகள், வேறு பறவைகள் மற்றும் பிற விலங்குகளால் வேட்டையாடப்பட்ட பெரிய உயிரினங்களையும் உண்கின்றன. தரையிலோ நீரிலோ தனக்கான இறையைக் கண்டுவிட்டால் தக்க சந்தர்ப்பம் வரும்வரை அதனை நோட்டமிட்டவாறு ஆகாயத்தில் வட்டமிட்டுக்கொண்டிருக்கும். பின்பு எதிர்பாராத திசையிலிருந்து வந்து திடீரொன இறையைப் பற்றிக்கொண்டு மர உச்சிக்கோ அல்லது மலை உச்சிக்கோ சென்றுவிடும். தனது கால் நகங்களால் இறையைக் கீறிக் கிழித்து அலகினால் கொத்தி கொன்றுவிட்டபின்பு உண்ண ஆரம்பிக்கும்.

எமது சூழலில் பிற உயிரினங்கள் போன்று பருந்துகளை மிக எளிதாகக் கண்டுகொள்ள முடியாது. காரணம் அவை மனிதர்களைவிட்டும் தூரமாகவே வாழ்கின்றன. மிகப்பெரிய உயரமான மர உச்சிகளிலும் செங்குத்தான மலைகளின் முகடுகளிலுமே இவை வாழ்கின்றன. பருந்துகள் கூட்டாக வாழும் பழக்கத்தைக் கொண்டிருப்பினும் முட்டையிடும் காலம் வரும்போது பிற பருந்துகளில் இருந்து ஆண் பருந்தும் பெண் பருந்தும் தனித்துச்சென்று தமக்கென ஒரு கூட்டை அமைத்துக்கொள்கின்றன. மனித சஞ்சாரமற்ற அமைதியான உயருந்த இடங்களில் நீர் நிலைகளுக்கு அருகாமையில் மதது கூடுகளை அமைத்துக்கொள்கின்றன.

பெண் பறவையானது ஆண் பறவையைவிட பெரிதாக இருக்கும். ஆரம்பத்தில் ஒன்றிணையும் ஆண்பறவையும் பெண் பறவையும் அவற்றின் இறுதிக்காலம் வரை ஒன்றாகவே இருக்கும். பெண் பருந்து ஒவ்வொரு வருடமும் இரண்டு அல்லது மூன்று முட்டைகளை இடுகின்றன. முட்டையை ஆண் பறவையும் பெண் பறவையும் புரிந்துணர்வுடன் மாறி மாறி அடைகர்கும். ஒன்று அடைகாக்கும் சமயத்தில் மற்றையது இறைதேடிக்கொண்டு வரும்.

முட்டையிட்டு நாற்பது நாட்களில் குஞ்சுப் பறவை இவ்வுலகை எட்டிப்பார்க்கும். இவை கண்களை அகலத்திறந்துகொண்டே முட்டையிலிருந்து வெளிவரும். அப்போது உடலில் மயிர்கள் இருக்காது. அவை பறப்பதற்கும் சுயமாக உணவு தேடவும் கற்றுக்கொள்ளும்வரை பெற்றோரின் பாதுகாப்பிலேயே வளரும்.

சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ் இந்த பருந்துகளின் வாழ்க்கையில் அபூர்வமானதொரு படிப்பினையை மனிதனுக்கு சொல்லித்தருகின்றான். பொறுமையும் முயற்சியுமுடைய மனிதன் வெற்றிபெறுவான் என்பதனை இதனைக் கொண்டு உணர்த்துகின்றான். இவ்வாறு மனிதன் பாடம்பெற வேண்டும் என்றுதான் படைப்பினங்களைப் பற்றி ஆராயுமாறு அல்லாஹ் அல்குர்ஆனிலே ஏராளமான இடங்களில் கூறுகின்றான்.

“பூமியில் நீங்கள் சுற்றித்திரிந்து படைப்பபை எவ்வாறு அல்லாஹ் (ஆரம்பமாகத்) துவங்கி, பின்பு மற்றொரு உற்பத்தியை (எவ்வாறு) உண்டு பண்ணுகிறான் என்பதைப் பாருங்;கள். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருள்மீதும் ஆற்றலுடையவன் என்று (நபியே) கூறுவீராக.” (அல்அன்ஆம் : 20)

பறவைகளிலேயே கூடுதல் ஆயுள்கொண்ட உயிரி இந்த பருந்துதான். இவை சுமார் 70 வருடங்கள்வரை உயிர் வாழ்கின்றன. அழகான தோற்றத்துடன் வானிலே பறந்து திரியும் பருந்துகள் தமது 40ஆவது வயதோடு பலவீனப்பட ஆரம்பிக்கின்றன. அவற்றின் இறகுகள் கணத்து உதிர ஆரம்பிப்பதோடு அலகும் உறுதியிழந்து கீழ்நோக்கி வலைந்துவிடுகிறது. கால் நகங்களும் வலைந்து வலுவிழந்து போய்விடும். இதன்போது அவற்றால் பறக்கவோ வேட்டையாடவோ உணவுண்ணவோ முடியாது போவதால் அவை இரண்டு முடிவுகளில் ஒன்றைத் தேர்வு செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றன.

ஒன்று; தனக்கு இப்படியாகிவிட்டதே என மணமுடைந்து இறந்துவிடுவது. அல்லது எதிர் நீச்சலடித்து வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றிபெறுவது. ஆம் இதில் பருந்துகள் ஆச்சரியமான விதத்தில் தன்நம்பிக்கையுடன் இரண்டாம் முடிவைத் தெரிவு செய்து மீண்டும் புதுவாழ்வு கெறுகின்றன. எப்படித்தெரியுமா? பாருங்கள்….

இவ்வாறு பருந்து தான் தனது 40ஆம் வயதில் வலுவிழந்து வருவதை உணர்ந்துகொள்ளும் பருந்து பாதுகாப்பானதொரு மலைஉச்சிக்குச் செல்கின்றது. பின்பு துன்பமிகுந்த தன் வேலையைச் செய்ய ஆரம்பிக்கின்றது. முதலில் தனது அலகை கடினமானதொரு பாறையில் மோதி மோதி உடைத்துக்கொள்ளும். பின்பு சிறிது காலத்தில் புதியதொரு அலகு அங்கு முளைத்துவிடும். பின்பு அவ்வலகைக்கொண்டு தனது இறக்கைகளையெல்லாம் வேதனையை அனுபவித்துக்கொண்டே பிடுங்கி எரிந்துவிடும். பின்னர் பாறையில் தனது நகங்களால் கீறிக் கீறி நகங்களையும் களட்டிக்கொள்ளும். இவற்றையெல்லாம் சுலபமாகச் செய்துவிட முடியாது. தாங்கொனா வேதனையை அனுபவித்துக்கொண்டேதான் அலகையும் நகங்களையும் இறக்கைகளையும் கலைகின்றன.

இவ்வாறு மிக வேதனையான நோவினை தரக்கூடிய செயலைச் செய்துவிட்டு உணவோ, நீரோ இன்றி அதே இடத்தில் சுமார் ஐந்து மாதங்கள் தங்கியிருக்கும். ஐந்து மாதங்கள் கழிந்ததும் சாகக் கிடந்த பருந்து மீண்டும் புத்துயிர்பெற்று அழகுடன் காட்சியளிக்கும். அதற்கு புது இறக்கைகளும் புது நகங்களும் அலகும் முளைத்திருக்கும். இதன்பிறகு அப்பருந்து இன்னும் முப்பது வருடங்களுக்கு உயிர்வாழும் ஆற்றலைப் பெருகின்றது.

பார்த்தீர்களா வல்லவன் அல்லாஹ் எவ்வகையான அற்புதங்களையெல்லாம் தனது படைப்புகளில் வைத்திருக்கின்றான் என்று. உண்மையில் இதில் மனிதனுக்குப் பல படிப்பினைகள் காணப்படுகின்றன.

1)    ஒரு துன்பத்தை எதிர்கொள்ளும்போது சோர்வடைந்துவிடாமல் பொறுமையுடனும் முயற்சியுடனும் கருமமாற்றினால் நிச்சயம் வெற்றி கிட்டும். (துன்பம் :- பொறுமை + முயற்சி + வெற்றி)

2)    குறுகிய ஐந்து மாதங்கள் உண்ணல் பருகல் ஏதுமின்றி வேதனையை அனுபவித்துக்கொண்டு பொறுமையாக இருந்த பருந்து இன்னும் முப்பது வருடங்கள் வாழும் நீண்ட ஆயுளைப் பெறுகின்றது. எனவே துன்பம் குறுகியது அதனை வென்றால் வரும் இன்பமோ விசாலமானது. அல்லாஹ் கூறுகின்றான். “ஆகவே நிச்சயமாக கஷ்டத்தின் பின் இலகு இருக்கின்றது. நிச்சயமாக கஷ்டத்தின் பின் இலகு இருக்கின்றது.” (அஷ்ஷரஹ்:5,6)

படைப்புகளைப் பார்த்து படிப்பினைபெற்று வல்லவன் அல்லாஹ்வுக்குக் கீழ்படிந்து வாழ்வோம்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக